< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி:  50 பாலஸ்தீனர்களும் உயிரிழந்ததாக தகவல்
உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி: 50 பாலஸ்தீனர்களும் உயிரிழந்ததாக தகவல்

தினத்தந்தி
|
1 Nov 2023 10:19 AM IST

இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களாக காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகிறது.

டெல் அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது. முதலில் வான் மற்றும் கடல்வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களாக காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகிறது.

வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல்கள் தீவிரமாக நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர், மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அங்கு இஸ்ரேல் ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் நேருக்கு நேர் எதிர்கொண்டு வருவதாகவும், வீதிகளில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையில் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகி கிடக்கும் நிலையில், தரைவழி தாக்குதல் அங்கு மேலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் வடக்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது.

இந்தநிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அக்., 7 அன்று இஸ்ரேலுக்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன், அங்கு அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்தன.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில்,

காசா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

காசா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

விமானப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனக்கூறியுள்ளது.

ஹமாஸ் வெளியிட்ட செய்தியில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும், இந்த முகாமில் தங்கவில்லை, அப்பாவிகளை கொன்றதை மறைக்க இஸ்ரேல் பொய்யான செய்திகளை பரப்புகிறது எனக்கூறியுள்ளது.

மேலும் செய்திகள்