இஸ்ரேலில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து
|இஸ்ரேலில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்த நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
காலநிலை மாற்றத்தால் தற்போது உலக வெப்பமயமாதல் மிகவும் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது. அங்கு மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசை தாண்டியது. இது இஸ்ரேல் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவாகும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மைய தரவுகள் கூறுகின்றன.
குளிர்காய தடை
இந்த வெப்பக்காற்று காரணமாக மின்துறையின் உள்கட்டமைப்பு சேதம், மின்சார தடைகள் போன்றவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டது. இதன் காரணமாக பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன. எனவே இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக அங்கு குளிர்காய்வதற்காக தீ மூட்டுவதால் வெப்பநிலை மேலும் அதிகரித்ததையடுத்து அங்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை தீ மூட்டுவதற்கு தடை விதித்து அந்த நாட்டின் தீயணைப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
இதற்கிடையே வெப்ப அலை காரணமாக இஸ்ரேல் நாட்டில் சுமார் 220 திறந்தவெளி பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
எனினும் தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.