< Back
உலக செய்திகள்
கடைசி இலக்கு.. பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு ரபா நகரை தாக்க தயாராகும் இஸ்ரேல்
உலக செய்திகள்

கடைசி இலக்கு.. பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு ரபா நகரை தாக்க தயாராகும் இஸ்ரேல்

தினத்தந்தி
|
14 March 2024 11:13 AM IST

காசாவின் தெற்கு முனையில் உள்ள முக்கிய நகரான ரபாவை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், இந்த உக்கிரமான போருக்கு வழிவகுத்தது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடியாக ஹமாசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காசாவின் தெற்கு முனையில் உள்ள முக்கிய நகரான ரபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ரபா பாதுகாப்பான பகுதி என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே தனது கடைசி இலக்காக ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது. மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட உள்ளது. ரபாவில் வசிக்கும் 1.4 மில்லியன் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களில் பெரும்பாலானவர்களை காசாவின் மையப் பகுதியில் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக ராணுவம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

ரபா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. ரபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்