< Back
உலக செய்திகள்
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை
உலக செய்திகள்

ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை

தினத்தந்தி
|
30 Aug 2024 11:56 AM GMT

ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, மேற்குகரை பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குகரையின் ஜெனின், நப்லஸ், டியூபஸ், துல்கரிம் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு கரையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயதக்குழுவின் மேற்கு கரையின் ஜெனின் நகர் பிரிவு முக்கிய தளபதி இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜெனின் நகர் பிரிவு ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியாக செயல்பட்டு வந்த வாசிம் ஹசீம் உள்பட ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 3 பேர் இன்று ஜெனின் நகரின் சபாப்டா நகரில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தேடுதல் பணியில் இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஹமாஸ் தளபதி வாசிம் ஹசீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேவேளை, எஞ்சிய 2 பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழு ஜெனின் பிரிவு தளபதி இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்