காசாவுக்குள் நுழைவதற்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்
|போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. ஆனால் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சில வழித்தடங்கள் வழியாக மட்டுமே காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கிறது. அதன்படி காசா-இஸ்ரேலுக்கு இடையேயான கெரெம் ஷாலோம் எல்லை பகுதி மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக விளங்கி வந்தது.
இந்த சூழலில் கடந்த வார இறுதியில் கெரெம் ஷாலோம் எல்லை பகுதியை குறிவைத்து ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் மூடியது. இதன் காரணமாக காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன. இந்த நிலையில் கெரெம் ஷாலோம் எல்லை பகுதியை இஸ்ரேல் மீண்டும் திறந்தது.