இஸ்ரேல்: மகனை காப்பாற்ற பாய்ந்து துப்பாக்கி குண்டுகளுக்கு இரையான பெற்றோர்
|இஸ்ரேலில் பயங்கரவாதிகளிடம் இருந்து மகனை காப்பாற்ற பாய்ந்து துப்பாக்கி குண்டுகளுக்கு பெற்றோர் பலியான அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோன்று எல்லையையொட்டிய பகுதியில், துப்பாக்கி சூடும் நடத்தியது. அவர்களின் இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தம்பதி ஒன்று குடும்பத்துடன் அறைக்குள் பதுங்கி இருந்தது.
ஷ்லோமி மத்தியாஸ் மற்றும் அவருடைய மனைவி டெபோரோ ஆகியோருடன், ரோத்தம் மத்தியாஸ் என்ற அவர்களின் 16 வயது மகனும் இருந்துள்ளான். பயங்கரவாதிகள் தாக்குதலின்போது, இவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கும் வந்துள்ளனர். கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.
ஆனால், மகனை காப்பாற்றுவதற்காக பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போன்று படுத்து கொண்டனர். இதில், படுகாயமடைந்த அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டனர்.
இந்த தாக்குதலின்போது, அவர்களின் மகனுக்கு வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. எனினும், மகனை காப்பாற்றி விட்டனர். தெற்கு இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மத்தியாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.