மனிதாபிமான உதவி வழங்க காசாவில் 8-வது மருத்துவமனையை உருவாக்கும் இஸ்ரேல்
|காசாவின் ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தி உள்ளது.
காசா,
இஸ்ரேல்-காசா போர் கடந்த 7 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரத்து 900 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் சமீபத்தில் இஸ்ரேல் மீது காசா நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பினை இஸ்ரேல் நிராகரித்தது.
மேலும் காசாவின் ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியது. பின்னர் தனது ராணுவத்தை களமிறக்கிய இஸ்ரேல் அங்கு தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் காசாவின் மையப்பகுதியான டெய்ர் அல்-பலாஹ் நகரில் இஸ்ரேல் ஒரு மருத்துவமனையை உருவாக்கி வருகிறது. இது ரபா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமைக்கப்படுகிறது. காசா மீது போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலால் உருவாக்கப்படும் 8-வது மருத்துவமனை இதுவாகும்.