< Back
உலக செய்திகள்
24வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது
உலக செய்திகள்

24வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது

தினத்தந்தி
|
30 Oct 2023 11:20 AM IST

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

Live Updates

  • 30 Oct 2023 1:50 PM IST

    இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல்

    இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள நெடிவட் நகரை குறிவைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்தது. ஆனாலும், 3 ராக்கெட்டுகள் நெடிவட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் வீடு சேதமடைந்துள்ளது. ஆனாலும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

  • 30 Oct 2023 12:56 PM IST

    இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டோம் - ஹிஸ்புல்லா

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், லெபனான் தெற்கு எல்லைப்பகுதியில் பறந்த இஸ்ரேலிய டிரோனை சுட்டுவீழ்த்திவிட்டதாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

  • 30 Oct 2023 12:46 PM IST

    சிரியாவில் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

    சிரியாவில் 2 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் தென்மேற்கே உள்ள டரா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

  • 30 Oct 2023 11:21 AM IST

    பலி எண்ணிக்கை:

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 8 ஆயிரத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

  • 30 Oct 2023 11:20 AM IST

    24வது நாளாக தொடரும் போர்:

    இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

    இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. போர் இன்று 24வது நாளாக நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்