இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்வு
|இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது.
ஜெருசலேம்,
Live Updates
- 25 Oct 2023 9:23 PM IST
மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு தடையின்றி செல்ல வேண்டும் - பிரான்ஸ் அதிபர்
காசாமுனைக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டுமென பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 25 Oct 2023 5:52 PM IST
பிணைக்கைதிகளின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்தால் பணவெகுமதி - இஸ்ரேல் பாதுகாப்புப்படை அறிவிப்பு
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு 200க்கும் மேற்பட்டோரை காசாமுனைக்கு பிணைக்கைதிகளாக கடத்தி சென்றது. பிணைக்கைதிகளில் இதுவரை 4 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
ஆனாலும், இன்னும் 223 பேர் காசாமுனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாமுனைக்கு கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகளின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பணவெகுமதி அளிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்ட அறிக்கையில், அமைதியாக வாழவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமென்றால் மனிதாபிமான செயலை உடனே செய்யுங்கள். உங்கள் பகுதியில் (காசா) உள்ள பிணைக்கைதிகளின் இருப்பிடங்கள் குறித்த நம்பத்தகுந்த, பயனுள்ள தகவலை எங்களிடம் கூறுங்கள்.
உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் இஸ்ரேல் ராணுவம் உச்சபட்ச பாதுகாப்பு வழங்கும் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறோம். உங்களுக்கு பணவெகுமதியும் கிடைக்கும். உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Oct 2023 5:22 PM IST
பலி எண்ணிக்கை உயர்வு:-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 6 ஆயிரத்து 546 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது.
- 25 Oct 2023 5:07 PM IST
சிரியா விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிரியா அரசு ஊடகம் வெளியிட்ட பதிவில், அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Oct 2023 4:52 PM IST
ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் சந்திப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 19வது நாளாக நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்திய ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினரை குறிவைத்து காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், போர் மேலும் விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் சந்திப்பு இன்று லெபனானில் நடைபெற்றது. லெபனான் தலைநகர் பெரூட்டில் நடந்த சந்திப்பின்போது காசா மற்றும் பாலஸ்தீன மக்களின் உண்மையான வெற்றிக்கான இலக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
- 25 Oct 2023 3:22 PM IST
பிணைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் - ஹமாஸ் அமைப்புக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1405 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளை, இந்த தாக்குதலின் போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 200 க்கும் மேற்பட்டோரை காசாவுக்குள் பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர். பிணைக்கைதிகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அடக்கம்.
இதனிடையே, கத்தார், எகிப்து நாடுகளின் பேச்சுவார்த்தையையடுத்து பிணைக்கைதிகளில் 2 அமெரிக்கர்கள், 2 இஸ்ரேலியர்கள் என மொத்தம் 4 பேரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுதலை செய்துள்ளனர். இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எகிப்தில் இருந்து மனிதாபிமான உதவி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், குறைவான அளவிலேயே மனிதாபிமான உதவி பொருட்கள் காசாவுக்குள் நுழைகின்றன. இதனால், காசாவுக்கு அதிக அளவில் உதவி பொருள்களை கொண்டு செல்ல அனுமதியளிக்கும்படி இஸ்ரேலுக்கு பல தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், பிணைக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸ் அமைப்புக்கும், மனிதாபிமான உதவிப்பொருட்கள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும்படி இஸ்ரேலுக்கும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, ஹமாஸ் வசம் இன்னும் 223 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- 25 Oct 2023 2:47 PM IST
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.
- 25 Oct 2023 2:46 PM IST
19வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 19வது நாளாக நீடித்து வருகிறது.