லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் - 17 பேர் படுகாயம்
|இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த மாதம் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 38வது நாளாக நீடித்து வருகிறது.
இதில், கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 11 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 463 ஆக உள்ளது.
இதனிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட், ஏவுகணை, துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நேற்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளான டொவிவ், கிர்யத் ஷமொனாவை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணை தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிகழ்வு போரை விரிவுபடுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.