இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமல்
|இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதில், சிலரை ஹமாஸ் விடுதலை செய்த நிலையில் இன்னும் 240 பேர் பிணைக்கைதிகளாக காசாவில் உள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வந்தனர். இதனிடையே, போர் நேற்று 48 வது நாளை எட்டியது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை மீட்க இஸ்ரேல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், போரை நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பேச்சுவார்த்தையின் பயனாக பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதேவேளை, இஸ்ரேல் தங்கள் நாட்டில் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும், 4 நாட்கள் தற்காலிகமாக போரை நிறுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தின்போது பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.