< Back
உலக செய்திகள்
அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்

Image Courtacy: AFP

உலக செய்திகள்

அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்

தினத்தந்தி
|
9 Nov 2023 1:47 PM IST

காசாவில் அல் ஷிபா மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள எக்ஸ்ரே பிரிவு உட்பட முக்கிய துறைகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 16 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் கொடூரமான தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் என 1,400 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் கொதித்தெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது.

இருதரப்புக்கும் இடையிலான இந்த போர் 2-வது மாதத்தில் நுழைந்துள்ளது. போரை நிறுத்தும்படி உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதால் அங்குள்ள மக்கள் உயிர் பயத்துடன் கூட்டம் கூட்டமாக தெற்கு காசாவை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர். முன்னதாக போர் தொடங்கிய ஒரு வாரத்தில் வடக்கு காசாவை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்ததின் பேரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

எனினும் லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசாவை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து அங்கேயே இருந்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வடக்கு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. அதே வேளையில் வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் தெற்கு காசாவுக்கு இடம் பெயர தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை காலக்கெடு வழங்குவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதனை பயன்படுத்தி வடக்கு காசாவில் உள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வடக்கு காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசாவை நோக்கி செல்லும் மக்கள் இடையில் இஸ்ரேலிய சோதனை சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதாகவும், அப்போது இஸ்ரேலிய படைகளால் பலர் கைது செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இஸ்ரேலின் தரை படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அமைப்பு இதனை மறுத்துள்ளது.

இதனிடையே அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றின் மீது வான்தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் காசாவில் அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள மருத்துவமனையின் நுழைவாயிலுக்குச் செல்லும் பிரதான சாலைக்கு மிக அருகில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் அல் ஷிபா மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள எக்ஸ்ரே பிரிவு உட்பட முக்கிய துறைகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில்10 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வான்வழித் தாக்குதல்கள் காசாவின் வடக்குப் பகுதியை மட்டுமல்ல, கான் யூனிஸ் நகரம் உட்பட தெற்குப் பகுதியையும் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இதனிடையே இஸ்ரேலியப் படைகள் காசா நகருக்குள் ஆழமாக முன்னேற முயலும் போது அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அல்-கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்