லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா: பதிலடி கொடுத்த இஸ்ரேல்
|லெபனானில் இருந்து 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவியுள்ளது.
பெரூட்,
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் விமானப்படை இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இஸ்ரேல், ஈரானுக்கு செல்வதை தவிர்க்குமாறு என தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுத்தியுள்ளது.
இதனிடையே, லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவினர். ஆனால், இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தாக்கி அழித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் யாரேனும் உயிரிழந்தனரா? காயம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
சிரியாவில் உள்ள தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.