< Back
உலக செய்திகள்
போரினை இடைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை
உலக செய்திகள்

போரினை இடைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை

தினத்தந்தி
|
7 Nov 2023 4:56 AM IST

தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிகளை அனுமதிக்கவும், பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

காசாவில் மனிதாபிமான போர் இடைநிறுத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும், சனிக்கிழமை ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கும் சென்று சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்கு ஆண்டனி பிளங்கன் திடீர் பயணமாக சென்றார். அங்கு அவர் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை சந்தித்து, இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினை குறித்தும், மேற்கு கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் காசா மீதான தாக்குதல்களை இடைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான இடைநிறுத்தங்கள் குறித்த சாத்தியக்கூறுகள், தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிகளை அனுமதிக்கவும், பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்களும் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பல குழந்தைகள், பல அமெரிக்க குடிமக்கள் உட்பட ஹமாசிடம் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் ஜோ பைடன், நேட்டன்யாகுவுடன் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்