இஸ்ரேல்-ஹமாஸ் போர்; 29 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி
|எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் அடுத்து செல்ல கூடும் என அஞ்சப்படுகிறது.
காசா,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 107 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
எனினும், இதுபற்றிய ஆவண பதிவுகளில், உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் வீரர்களை வேறுபடுத்தி காட்டவில்லை. ஆனால், அவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்படும் அரசின் ஒரு பகுதியாக காசா சுகாதார அமைச்சகம் உள்ளது. எனினும், உயிரிழப்புகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து வருகிறது. இதற்கு முன் காசாவில் ஏற்பட்ட போரின்போது, பதிவு செய்யப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது, ஐ.நா. அமைப்புகள், தனிப்பட்ட நிபுணர்கள் மற்றும் இஸ்ரேலின் எண்ணிக்கையுடன் பெரிய அளவில் ஒத்து போயிருந்தது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் அடுத்து செல்ல கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏனெனில், போரில் இருந்து தப்பிப்பதற்காக, காசாவை சேர்ந்த 23 லட்சம் மக்களில் பாதி பேர் அந்த பகுதியிலேயே அடைக்கலம் புகுந்துள்ளனர்.