இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி சோதனை; 24 பயங்கரவாதிகள் சிறை பிடிப்பு
|இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் இரவில் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 24 பயங்கரவாதிகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல் அரசால், தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளவர்களை கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதி, ஜூடே மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் இரவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரமல்லா நகரில் சில்வாத், மரா ரபா, பெய்த் சிரா, சிரிஸ் ஆகிய கிராமங்களிலும், அல்-அய்டா அகதிகள் முகாமிலும், ஜலஜோன் அகதிகள் முகாமிலும் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து, 10 தேடப்படும் பயங்கரவாதிகளை வீரர்கள் கைது செய்தனர்.
இதேபோன்று நப்லஸ் நகரில், பர்கா, பெய்தோட், ஆரிப் மற்றும் பெய்த் ரீமா ஆகிய கிராமங்களில் 6 தேடப்படும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
நப்லஸ் நகரில் நடந்த சோதனையின்போது, ஆயுதமேந்திய நபர்கள் சிலர், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை தீப்பற்ற வைத்து அவற்றை வீரர்களை நோக்கி எரிந்தும், கற்களை வீசியும் உள்ளனர்.
எனினும் இதனால், இஸ்ரேல் படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதன்பின்பு, அவர்களிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிரடி சோதனையில் மொத்தம் 24 பயங்கரவாதிகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.