< Back
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு
உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு

தினத்தந்தி
|
4 Sept 2024 10:32 PM IST

காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

காசா,

பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த போரை தற்காலிமாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தின. இதற்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஒத்துக் கொண்டன.

இதையடுத்து காசாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள காசாசிட்டி, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மத்திய காசா பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

முகாம்கள் நடக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றாலும் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முகாம்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதுகுறித்து பாலஸ்தின சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் கூறும்போது. போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்த, தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்