< Back
உலக செய்திகள்
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி
உலக செய்திகள்

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி

தினத்தந்தி
|
27 July 2024 11:42 PM IST

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இந்த பள்ளியில் ஆயுதங்களை பதுக்கி வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

டெய்ர் அல்-பலா,

இஸ்ரேல் படையினர் காசாவின் மத்திய பகுதியில் வான்வழியே இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், டெய்ர் அல்-பலா பகுதியில் உள்ள மகளிர் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்திருந்த 30 பேர் உயிரிழந்தனர்.

இதில், காயமடைந்த நபர்கள் நகரில் அல் அக்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, இந்த பள்ளியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வந்துள்ளது.

அதில், ஆயுதங்களை பதுக்கி வைத்து, தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது. இதுதவிர வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 11 பேர் பலியாகி உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் இஸ்ரேல் நாடுகள், இத்தாலியில் ஒன்றாக சந்தித்து, பணய கைதிகள் விவகாரம் மற்றும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பற்றி இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன.

இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காசா போரால் 39,100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. அவர்களில் 115 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனினும், 115 பேரில் 3-ல் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகள்