உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 20 பேர் பலி; காசா அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
|அந்த கட்டிடம் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி, காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 4 மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்த சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. பதிலுக்கு பாலஸ்தீனர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும், போரானது தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 150 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அவர்கள் மனிதநேயம் சார்ந்த உதவி கோரி காத்திருந்து உள்ளனர் என கூறப்படுகிறது.
எனினும், இந்த விவகாரம் பற்றி விசாரித்து வருகிறோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. எங்களுடைய விமானம் அல்லது ராக்கெட் இந்த தாக்குதலை நடத்தியது என்ற தகவலை நாங்கள் மறுக்கிறோம். ஆனால், அதுபற்றி விசாரணை செய்து வருகிறோம். அந்த கட்டிடம் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில், காசாவில் காப்பகம் ஒன்றின் மீது நேற்று நடந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் மூத்த அதிகாரியான தாமஸ் ஒயிட் என்பவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அந்த அமைப்பு, இஸ்ரேலை நேரிடையாக குற்றம் சாட்டவில்லை. காசா நகரின் தெற்கே கான் யூனிஸ் பகுதியில் நடந்து வரும் மோதலால், 2 முக்கிய மருத்துவமனைகள் தனித்து விடப்பட்டு உள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். புலம் பெயர்ந்து சென்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளே இருக்கின்றனர்.
நேற்று ஒரேநாள் இரவில் 3-வது மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். சமீப நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தென்பகுதியை நோக்கி தப்பி ஓடி காப்பகங்களிலும், முகாம்களிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.