ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது - இஸ்ரேல்
|ஹமாஸை அழிக்கும்வரை போரில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா,
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. காசாவின் காற்றில் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
சர்வதேச அமைப்புகள் அனைத்தும் போரை நிறுத்துமாறும், காசா மக்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளை அனுப்புமாறும் வற்புறுத்திவருகின்றன. ஆனால் இஸ்ரேல் யாருக்கும் இசையவில்லை. ஹமாஸை அழிக்கும்வரை போரில் இருந்து பின் வாங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தாக்குதல்களைத் தொடர்ந்துவரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் ராணுவத்தின் முக்கியத் தலைவர் உமர் அல்-பயேத் என்பவரைக் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேற்குக் கடற்கரைப் பகுதியில் காவல்துறை மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாதநபர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.