காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
|காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஜிகாத் அமைப்புகளின் கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்படி, பயிற்சி மையங்கள், சுரங்க பாதைகள், தலைமை இடங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதேபோன்று காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார்.
தெற்கு லெபனானில் ஹிஜ்புல்லா அமைப்புகளின் நிலைகள், முகாம்கள் உள்ளிட்டவற்றின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
தொடர்ந்து, காசா நகருக்குள் செல்லும் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் படைகள் பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தீவிர போர் நடைபெற கூடும் என்ற நிலையில், லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.