சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா இம்ரான்கான்..? ஊழல் வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்தது பாக்., கோர்ட்டு
|தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் மோசமான ஆட்சிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியை தழுவி தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதாரரான ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் மந்திரி சபையில் உள்ள ஒரு துறையே தோஷகானா ஆகும். அங்குள்ள சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை தோஷகானாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே குற்றவாளியாக தண்டனை பெற்றதால் இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனதுடன், அவரால் 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டது.
இந்த சூழலில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானின் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்றது.
அதை விசாரித்த தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் முகமது ஆகியோர் இம்ரான்கானின் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதாக தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பானது இம்ரான் கான் வரவிருக்கும் தேசியத் தேர்தலில் பங்கேற்பதற்கு வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தண்டனை பெற்று ராவல்பிண்டி சிறையில் இருக்கும் இம்ரான்கான் ஜாமீனில் விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.