< Back
உலக செய்திகள்
ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
உலக செய்திகள்

ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

தினத்தந்தி
|
15 April 2024 10:01 PM IST

ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் - ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் இதுவரை நேரடி தாக்குதல் நடத்தியதில்லை. லெபனான், சிரியா போன்ற நாடுகளில் செயல்படும் ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. அந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி, ஈரானிய புரட்சிப்படை வீரர்கள் 6 பேர், சிரியாவை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.

இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். 120 பாலிஸ்டிக், ஏவுகனைகள், 170 டிரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவியது.

ஆனால், ஈரான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்களை இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தின. மேலும், இஸ்ரேல் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட சில ஏவுகணைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான் நாடுகளின் விமானப்படை போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தின.

ஆனாலும், ஈரான் நடத்திய தாக்குதலில் தெற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டதாகவும், தாக்குதலில் 7 வயது சிறுமிக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் ஈரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதால் ஈரான் மீதான தாக்குதலை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும், ஈரான் அணு உலை, ஆயுதக்கிடங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சிரியா, லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்