லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்; 23 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
|லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
திரிபோலி,
லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது.
ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, இந்த அமைப்பு எகிப்திய நாட்டு கிறிஸ்தவர்களை கும்பல், கும்பலாக கடத்தி சென்று, அவர்களை சித்ரவதை செய்து கொடூர கொலை செய்தது. இதுபற்றிய பிரசார வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
லிபியாவின் கிழக்கே பெங்காஜி, தெர்னா மற்றும் அஜ்தபியா போன்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சிர்தே என்ற கடலோர நகரை 2016-ம் ஆண்டு பிற்பகுதியில் தங்கள் வசப்படுத்தியது. பின், பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், அபராதங்களையும் விதித்தது என அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த படுகொலை பற்றி லிபியாவில் மிஸ்ரதா நகரில் உள்ள கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதுதவிர, ஒரு நபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு முன்பே, 3 பேர் உயிரிழந்து விட்டனர். 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.