அதிபர் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்.. ஈரான் தலைவர் அழைப்பு
|நல்ல விஷயங்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து வருவதாக நம்பும் தலைவர்களுக்கு ஈரான் தலைவர் கண்டனம் தெரிவித்தார்.
தெஹ்ரான்:
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு 4 பெண்கள் உள்பட 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த கார்டியன் கவுன்சில் 74 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது.
6 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை கடந்த 9-ம் தேதி வெளியிட்டது. அதில், முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தலைவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத்தும் ஒருவர். இவர் இதற்கு முன்பு 2021-லும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், எதிரியை வெல்வதற்கு இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அழைப்பு விடுத்துள்ளார். ஷியா பண்டிகையான ஈத் அல்-காதிர் விடுமுறையை முன்னிட்டு இன்று உரையாற்றியபோது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
மேலும், நல்ல விஷயங்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து வருவதாக நம்பும் தலைவர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். போட்டியிடும் வேட்பாளர்களில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிட்டு இவ்வாறு பேசவில்லை. எனினும், அதிபர் போட்டியில் இருக்கும் ஒரே சீர்திருத்தவாத வேட்பாளரான மசூத் பெஜெஷ்கியானை நேரடியாக தாக்குவதுபோல் இருந்தது.
ஈரான் மீண்டும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்ப வேண்டும் என்றும், மேற்கத்திய நாடுகளுக்கு அதன் எல்லையை அதிகரிக்க வேண்டும் என்றும் பெஜெஷ்கியான் சமீபத்திய உரையில் கூறியிருந்தார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மிகக் குறைந்த அளவே வாக்குப்பதிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.