ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு - பகீர் தகவல்
|ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெஹ்ரான்,
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் கலைத்துள்ளது.
இதனிடையே, கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஒடுக்க ஈரான் போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான மற்றும் கொடூரமான முறைகளை பின்பற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து ஈரான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான தகவலை பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ' தி கார்டியன்' தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, மார்ப்பு பகுதியை குறிவைத்து பால்ரஸ் குண்டுகள் கொண்ட துப்பாக்கி மூலம் ஈரான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி குண்டு காயம்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறுகையில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது பிறப்புறுப்பில் 2 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளன. மேலும், 10 குண்டுகள் அவரது தொடையில் பாய்ந்துள்ளது. 10 குண்டுகளையும் சுலபமாக எடுத்துவிட்டோம். ஆனால், அந்த 2 குண்டுகளை எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அந்த 2 குண்டுகளும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ஆழமாக பாய்ந்துள்ளது' என்றார்.
மேலும், பெண்களை போன்றே ஆண்கள் மீது குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆண்களின் கால்கள், புட்டம், முதுகு பகுதியில் பால்ரஸ் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஹிஜாப் போராட்டம் பின்னணி:-
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் 'அறநெறி போலீஸ்' பிரிவு செயல்பட்டு வருகிறது.
2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறநெறி போலீஸ் பிரிவு ஈரானில் மக்கள் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர்.
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினியை அறநெறி போலீசார் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஈரானின் பல நகரங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு பணிந்துள்ளது.
அந்த வகையில், ஈரானில் பொதுவெளியில் இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் உறுதிபடுத்தும் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.
அறநெறி போலீஸ் பிரிவு நிரந்தரமாக கலைக்கப்படதா? அல்லது இந்த நடவடிக்கை தற்காலிகமானதா? என்று அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும், அறநெறி போலீஸ் பிரிவு கலைப்பு ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.