176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்களுக்கு சிறை
|176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
டெஹ்ரான்,
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. உக்ரைனுக்கு சொந்தமான இந்த விமானத்தில் 176 பேர் பயணம் செய்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்திலேயே இந்த விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
ஈரான் ஆரம்பத்தில் இதனை விபத்து என கூறியது. ஆனால் உக்ரைன் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிவதற்கு சற்று முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. அதேபோல் உக்ரைன் விமானம் ஏவுகணை யால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடாவும் தெரிவித்தது.
ஆனால் ஈரான் அதை திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதை அப்போதைய அதிபர் ஹசன் ருஹானி ஒப்புக்கொண்டார்.
அதே சமயம் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் கூறி ஈரான் அரசு மன்னிப்பு கோரியது.
ராணுவ தளபதிக்கு 13 ஆண்டு சிறை
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படையின் தளபதி உள்பட 10 ராணுவ வீரர்கள் மீது ஈரான் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் ராணுவ தளபதி உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. தொடர்ந்துஅவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெஹ்ரான் கோர்ட்டு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. விமானத்தின் மீது ஏவுகணை வீச உத்தரவிட்ட ராணுவ தளபதிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 9 ராணுவ வீரர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.