< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஈரான் எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஈரான் எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 Oct 2023 10:52 AM IST

இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார்,

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இரு தரப்பையும் சேர்த்து போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 266 ஆக உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல், காசா மீது தரைவழி தாக்குதலை தொடர உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசேன் அமிர் அப்துல்லாயியன் கத்தாரில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சு வார்த்தைக்கு பின் ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

"காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால், போரானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. போர் பரவுவதைத் தடுக்க விரும்புபவர்கள், காசாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தடுக்க வேண்டும்" என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கு ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசேன் அமிர் கடும் கண்டனம் தெரிவித்தார். " இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்