சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் புரட்சிப்படை முக்கிய தளபதி பலி
|தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டமாஸ்கஸ்,
ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் 'குவாட்ஸ்' என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, ரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, ஈரானின் எதிரியாக கருதப்படும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் குவாட்ஸ் படை பிரிவு ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, சிரியா, லெபனான், ஏமனில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் உதவியளித்து வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், ஈரானில் இருந்து சிரியா வழியாக லெபனான், காசாவுக்கு ஆயுதங்கள் கொண்டுசெல்லப்படுவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், ஈரானின் புரட்சிப்படையை சேர்ந்த முக்கிய நபர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் புரட்சிப்படையை சேர்ந்த முக்கிய தளபதி ராசி மவுசவி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே சயிதா சைனப் என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராசி மவுசவி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.