< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் - பதற்றம்
உலக செய்திகள்

பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் - பதற்றம்

தினத்தந்தி
|
17 Jan 2024 2:09 AM IST

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் 'குவாட்ஸ்' என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, ரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானி கடந்த 2020ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். குவாசம் சுலைமானியின் நினைவு தினம் கடந்த 3ம் தேதி ஈரானின் கெர்மன் நகரில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஈரானுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை குறிவைத்து ஈரானின் புரட்சிப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் புரட்சிப்படை நேற்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனைபேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்