எங்கள் நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேல் உளவாளிகளை கைது செய்துவிட்டோம் - ஈரான்
|தங்கள் நாட்டில் நுழைந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவாளிகள் அனைவரையும் கைது செய்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான்,
இஸ்ரேலின் உளவு அமைப்பு 'மொசாட்'. உலகின் மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் முதன்மையானதாக 'மொசாட்' உள்ளது.
இந்த உளவு அமைப்பு ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, லெபனான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ ரகசியங்களை சேகரித்தல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய உளவு அமைப்பின் உளவாளிகள் அனைவரையும் கைது செய்துவிட்டதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. ஈரானின் குர்திஷ்தான் மாகாணம் வழியாக இஸ்ரேலிய உளவாளிகள் ஈரான் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இந்த உளவாளிகளின் அனைவரையும் கைது செய்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட உளவாளிகள் ஈரானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த தகவல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.