< Back
உலக செய்திகள்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் - ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் - ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
5 Oct 2022 8:31 AM IST

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

தெஹ்ரன்,

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இவதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரான் அரசு மற்றும் அதிபர் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. அதேவேளை, போராட்டக்காரர்களை சமாதானபடுத்தும் முயற்சியில் அதிபர் ரைசி இறங்கியுள்ளார். மேலும், இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டு சதி தான் காரணம் எனவும் கூறி வருகிறார்.

இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்த அதிபர் இப்ராகிம் ரைசி, வன்முறைக்கு ஈரானின் எதிரி மற்றும் அதன் கூட்டாளி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் மற்றும் அது தொடர்பான வன்முறைக்கு காரணம் என அதிபர் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்