ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து; தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை - விசாரணையில் தகவல்
|ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
டெஹ்ரான்,
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் உடல் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆயுதப்படை அதிகாரிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், மலையின் மீது மோதிய உடனேயே தீப்பிடித்து எரிந்ததாகவும், ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையில் விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.