"ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கிய விவகாரத்தில் ஈரான் பொய் சொல்கிறது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
|உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே ரஷியாவிடம் டிரோன்களை வழங்கிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
கீவ்,
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
அதே சமயம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷிய படைகள் குறி வைத்து தாக்குதல் நடத்தியதால், அங்கு மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படுள்ளது.
இதனிடையே உக்ரைன் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை ஈரானிடம் இருந்து ரஷியா வாங்கியதாக அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்த ஈரான், முதல் முறையாக ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை நேற்று ஒப்புக்கொண்டது. ஆனால் ரஷியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிரோன்களையே வழங்கியதாகவும், உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே அவற்றை வழங்கிவிட்டதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கிய விவகாரத்தில் ஈரான் அரசு பொய் சொல்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். நாள்தோறும் குறைந்தபட்சம் 10 ஈரானிய டிரோன்களையாவது தங்கள் படையினர் சுட்டு வீழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரான் இதே போன்று தொடர்ந்து பொய் கூறி வந்தால், ரஷியா மற்றும் ஈரான் இடையேயான பயங்கரவாத ஒத்துழைப்பு குறித்து உலக நாடுகள் விசாரணை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.