< Back
உலக செய்திகள்
ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி கொலை
உலக செய்திகள்

ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி கொலை

தினத்தந்தி
|
24 Aug 2022 12:16 PM IST

சிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தெஹ்ரான்,

இராணுவ ஆலோசகராக சிரியாவில் பணியில் இருந்த IRGC யின் தரைப்படையின் உறுப்பினரான ஜெனரல் அபோல்பாஷல் அலிஜானி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீரமரணம் அடைந்தார் என்று அந்நாட்டு அரசு ஊடக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியாவில் ஷியாமுஸ்லிம் பிரிவை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துகின்றனர். இதன்காரணமாக இரு நாடுகளும் ராணுவ ரீதியில் பரஸ்பரம் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவான இஸ்லாமிக் புரட்சி படையின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி அரசுமுறை பயணமாக சிரியா சென்றிருந்தார். இந்த சூழலில் தான் சிரியாவில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் நேற்று அறிவித்தது.

ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. அவரது உடல் ஈரானுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த போர் விமானங்கள் நேற்று முன்தினம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ராணுவமுகாம்களை குறிவைத்து குண்டுகளை வீசியது. இந்த முகாம்களில் ஈரானை சேர்ந்த ராணுவஅதிகாரிகள், வீரர்கள் முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரான் ராணுவ மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்