ஈரான்: 2022-ம் ஆண்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
|அரசுக்கு எதிரான பேரணியின்போது, காரில் வந்த இளைஞர் ஒருவர் திரளாக கூடியிருந்த மக்கள் மீது திடீரென மோதி விட்டு சென்றார்.
தெஹ்ரான்,
ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அவர் 3 நாட்களில் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டமும் வெடித்தது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, 529 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர், கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் தெஹ்ரானில் பராண்ட் என்ற நகரில் நடந்த பேரணியின்போது, காரில் வந்த இளைஞர் ஒருவர் திரளாக கூடியிருந்த மக்கள் மீது திடீரென மோதி விட்டு சென்றார்.
இந்த மோதலில், போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மற்றும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், முகமது குபாடுலு (வயது 23) என்பவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதுபற்றி நடந்த வழக்கு விசாரணையின்போது, குற்றத்தினை குபாடுலு ஒப்பு கொண்டார். அவருக்கு கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இதற்கு எதிராக குபாடுலு மேல்முறையீடு செய்தபோது, சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு எதிரான தண்டனையை உறுதி செய்தது.
இதனையடுத்து, குபாடுலு இன்று தூக்கில் போடப்பட்டு, அவருடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022-ம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட 9-வது மரண தண்டனை இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.