< Back
உலக செய்திகள்
இங்கிலாந்துக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை ராணுவ மந்திரியை தூக்கிலிட்டது ஈரான்
உலக செய்திகள்

இங்கிலாந்துக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை ராணுவ மந்திரியை தூக்கிலிட்டது ஈரான்

தினத்தந்தி
|
14 Jan 2023 10:04 PM IST

இங்கிலாந்துக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை ராணுவ மந்திரியை ஈரான் அரசு தூக்கிலிட்டது.

இரட்டை குடியுரிமை

ஈரானில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை துணை ராணுவ மந்திரியாக இருந்தவர் அலிரேசா அக்பரி. ஈரானில் பிறந்த இவர் இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றிருந்தார். துணை ராணுவ மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகு அக்பரி அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று வந்தார். இதனால் அவர் இங்கிலாந்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அக்பரி அதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்பரி இங்கிலாந்தில் இருந்து ஈரான் திரும்பிய பிறகு நீண்டகாலமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

உளவு குற்றச்சாட்டில் கைது

அதன்பின்னர் அவர் இங்கிலாந்துக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து, அக்பரியை விடுதலை செய்யும்படி ஈரானை வலியுறுத்தின. ஆனால் அதை பொருட்படுத்தாத ஈரான் அரசு அக்பரி மீதான விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை மூடிய அறைக்குள் ரகசியமாக நடந்தது. விசாரணையின் முடிவில் அக்பரிக்கு மரண தண்டனை விதித்து ஈரான் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அக்பரின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென ஈரானிடம் இங்கிலாந்து கோரிக்கை வைத்தது.

தூக்கிலிடப்பட்டார்

இந்த விவகாரத்தில் இங்கிலாந்துக்கும், ஈரானுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வந்தது. அக்பரியை விடுதலை செய்ய தூதரக ரீதியிலான அனைத்து முயற்சிகளையும் இங்கிலாந்து எடுத்து வந்தது. இந்த நிலையில் உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் துணை ராணுவ மந்திரி அலிரேசா அக்பரியை தூக்கில் போட்டுவிட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. எனினும் அவர் எங்கு, எப்போது தூக்கிலிடப்பட்டார் என்ற விவரங்களை ஈரான் அரசு தெரிவிக்கவில்லை. முன்னதாக கடந்த வாரம் அக்பரி தனது குற்றங்களை ஒப்புக்கொள்வது போன்ற வீடியோ ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டிருந்தது.

இங்கிலாந்து கண்டனம்

ஆனால் அதன்பிறகு சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆடியோவில், அக்பரி தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், செய்யாத குற்றங்களை கேமராவில் ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஈரானுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதுபற்றி கூறுகையில், "இந்த மரண தண்டனை ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல்" என சாடினார்.

மேலும் அவர் ஈரானின் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும், அவரது எண்ணங்கள் அக்பரியின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்