< Back
உலக செய்திகள்
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள் - மாலுமிகளை விடுவிக்க ஈரான் முடிவு
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள் - மாலுமிகளை விடுவிக்க ஈரான் முடிவு

தினத்தந்தி
|
27 April 2024 2:36 PM IST

கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ந்தேதி சிறைபிடித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அக்கப்பல் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது.

இதனிடையே ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் கடந்த 18-ந்தேதி பாதுகாப்பாக கொச்சி திரும்பினார். மேலும் கப்பலில் சிக்கியுள்ள 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து மாலுமிகளையும் விடுவிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் கப்பலில் உள்ள மாலுமிகளை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து தெஹ்ரானில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கப்பலில் சிக்கியுள்ளவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்