ஈரான்: சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
|ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஜஸ்கியான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் அமைந்த நகரம் தபஸ். இந்நகரில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் நடந்த இந்த வெடிவிபத்தின்போது சுரங்கத்தில் 69 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சென்றனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. எனினும், அதிக அளவு மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டு மீட்பு பணியில் தொய்வு ஏற்படுத்தியது.
இந்த சுரங்க வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த வெடிவிபத்து பற்றி விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இன்னும் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.