'அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான்' - ஈரான் குற்றச்சாட்டு
|அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான் என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி நாசர் கனானி குற்றம் சாட்டினார்.
டெஹ்ரான்,
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம், கூட்டு விரிவான செயல்திட்டம் என அழைக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இதன்படி ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு கைமாறாக அணுசக்தி திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.
ஆனால் 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதுடன், ஒரு சார்பாக ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்தது. இதைத்தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்ததின் சில விதிகளை தளர்த்துவதாக ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவுக்கு காலவரையின்றி அனுமதி இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக்த்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார்.
டெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உரிய தரப்புகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையை நிறைவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், அதே வேளையில் நாட்டின் நலன்களை ஈரான் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான் என்று குற்றம் சாட்டிய அவர், தூதரக அளவில் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாளரம் காலவரையின்றி அமெரிக்காவுக்கு திறக்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.