டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: வெற்றிகரமாக நடத்த உதவிய உலக சுகாதார நிறுவன தலைவருக்கு விருது
|டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய உலக சுகாதார நிறுவன தலைவருக்கு விருது வழங்கப்பட்டது.
ஜெனீவா,
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. எத்தியோப்பியாவின் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாஸ் இதன் தலைவராக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். ஆப்பிரிக்காவில் இருந்து இந்த பதவிக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவிய காலத்தில் இவரது நடவடிக்கைகள் பாராட்டும்படியாக அமைந்தது. சர்வதேச விளையாட்டு அமைப்பாக ஒலிம்பிக் கமிட்டி உள்ளது. நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒழுங்கமைக்கும் பொறுப்பு அதனுடையது.
டோக்கியோவில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற இருந்தது. கொரோனா தொற்று பரவிய காரணத்தால் போட்டி தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டில் நடந்தது. இந்தநிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருதான 'ஒலிம்பிக் ஆர்டர்' விருதினை உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனோம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியதாக அவருக்கு விருது வழங்கப்பட்டது. இதனை ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் நேரில் சென்று அவருக்கு வழங்கினார். மேலும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டது.