'டைட்டன்' நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் மீட்பு: கரைக்கு கொண்டு வந்து ஆய்வு
|மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் சென்ற 5 கோடீசுவரர்கள், நீர்மூழ்கி வெடித்ததால் பலியானார்கள்.
வாஷிங்டன்,
மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண 'டைட்டன்' நீர்மூழ்கியில் சென்ற 5 கோடீசுவரர்கள், நீர்மூழ்கி வெடித்ததால் பலியானார்கள். அந்த நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பகுதிகளும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
5 பேர் பலி
கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
அதன் சிதைந்த பாகங்களை பார்க்கும் ஆர்வத்தில், 5 கோடீசுவரர்கள் கடந்த 18-ந் தேதி ஆழ்கடல் பயணம் மேற்கொண்டனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்த 'டைட்டன்' நீர்மூழ்கியில் அவர்கள் பயணித்தனர்.
அவர்களை பற்றி 4 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் 22-ந் தேதி அறிவித்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
மீட்பு
அதைத்தொடர்ந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் கனடா அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கியின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியது.
இந்நிலையில், நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள், ஆழ்கடலில் 3 ஆயிரத்து 810 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியுள்ளது. அந்த இடம், டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 488 மீட்டர் தூரத்தில் உள்ளது.
கனடாவில் ஆய்வு
நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களுடன், மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பொருட்களும் மீட்கப்பட்டு இருப்பதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. இது, நீர்மூழ்கி பற்றிய விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மீட்கப்பட்ட பாகங்கள், கனடா நாட்டின் நியூபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை கனடாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அந்த பாகங்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறியுள்ளது.
'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்தது? இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பதை அறிய இந்த பாகங்கள் உதவும் என்று கடலோர காவல்படை தலைவர் ஜேசன் நியுபேயர் தெரிவித்தார்.
மேலும், மனித உடல் பாகங்களாக கருதப்படுபவை, பலியான 5 பேரின் உடல் பாகங்களா என்றும் தெரிய வரும்.