சர்வதேச யோகா தினம்; யோகா பயிற்சியில் பெரும் அளவில் ஆர்வமுடன் ஈடுபட்ட அமெரிக்கர்கள்
|அமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக பெரும் அளவிலான மக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன்,
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது.
இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சிகளில் மக்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக உலக நாடுகள் சிக்கி சீரழிந்தன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதனால், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஓராண்டுக்கு நடைபெற உள்ளன. அதனால், நடப்பு ஆண்டின் சர்வதேச யோகா தினம் அதனுடன் சேர்ந்து நடைபெறுவது சிறப்பு பெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதனை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வாஷிங்டன் நினைவகத்தில், யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்துள்ளது. இந்த யோகா பயிற்சியில் எண்ணற்ற அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு யோகாசனங்களையும் செய்தனர்.