பாகிஸ்தானில் புலனாய்வு துறை அதிகாரி சுட்டு கொலை; மர்ம நபர்கள் அட்டூழியம்
|பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புலனாய்வு துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
பெஷாவர்,
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் யகதூத் பகுதியில் இரவு உணவை முடித்து கொண்டு போலீஸ் அதிகாரிகள் காரில் ஏற முற்பட்டனர். இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் புலனாய்வு துறையின் உதவி காவல் ஆய்வாளர் நஜ்பீர் ரகுமான் பலத்த காயமடைந்து உள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
துப்பாக்கி சூட்டில் மற்றொரு அதிகாரியான அமனுல்லா மற்றும் அவரது சகோதரரான ஜுனைத் பாக்தாதி ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி பயங்கரவாத ஒழிப்பு துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது. ஒரு மாதத்திற்குள் புலனாய்வு அதிகாரி மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும். கடந்த ஏப்ரலில் பாதுகாப்பு சோதனை சாவடி பகுதியில் நடந்த தாக்குதலில் புலனாய்வு அதிகாரி ஒருவர் மற்றும் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.