< Back
உலக செய்திகள்
விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு!

Image Credit : AFP

உலக செய்திகள்

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு!

தினத்தந்தி
|
19 May 2022 7:48 PM IST

கடந்த 3 வார காலமாக இருந்து வந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட உள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யக்கூடிய 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதம் உள்ள அளவே உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு திடீர் தடை விதித்தது.

அந்நாட்டில் பாமாயில் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தோனேசிய அரசு இந்த முடிவை எடுத்தது. இருப்பினும் குறுகிய கால நடவடிக்கையாக தான் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது என்று உலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதியை தடை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தோனேசியாவின் இந்த தடை நடவடிக்கையால், சர்வதேச வர்த்தக சந்தையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்படாத பாமாயில், சமையலுக்கான பாமாயில் என அனைத்து வகைகளின் ஏற்றுமதிக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெயின் விலை குறையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் இந்த தடை உற்பத்தியால் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்தியதை அடுத்து தடை நீக்கப்பட்டது. பாமாயில் ஏற்றுமதி தடையை திங்கள்கிழமை முதல் விலக்கி கொள்ளப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ இன்று தெரிவித்தார்.

அதிபரின் இந்த புதிய உத்தரவால், கடந்த 3 வார காலமாக இருந்து வந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட உள்ளது.

மேலும் செய்திகள்