இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்வு; 700 பேர் காயம்
|இந்தோனேசிய தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி குழந்தைகளே பெருமளவில் உயிரிழந்து உள்ளனர்.
மேற்கு ஜாவா,
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
இதனால், மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் திறந்தவெளி பகுதிகளுக்கும் ஓடியுள்ளனர். ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.
இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்படி, இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்து உள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் ஹென்றி அல்பியாந்தி கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதி பரவி கிடக்கிறது. கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. மீட்பு பணி சவாலாக உள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. ஏனெனில் மதியம் 1 மணியளவில் அவர்கள் பள்ளி கூடங்களிலேயே இருந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார். நிலநடுக்கத்தினால், மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதி நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.