தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம்; பயணிகளுக்காக மாற்று விமானம் கராச்சி சென்றடைந்தது!
|மாற்று விமானம் ஒன்று கராச்சி விமான நிலையம் சென்றடைந்தது.
கராச்சி,
ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இன்டிகோ விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 125 பயணிகளுடன் இன்டிகோ 6இ-1406 விமானம் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது.
சம்பந்தப்பட்ட விமானம் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டது. நான்கு மணி நேர பயணத்தில் அது ஐதராபாத் வந்தடைய வேண்டும்.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை காரணம் காட்டி நள்ளிரவு 2.15 மணிக்கு கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார், விமானத்தை அவரசமாக தரையிறக்க கோரினார். இதையடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கராச்சியில் சிக்கியுள்ள பயணிகள் மாற்று விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து மாற்று விமானம் ஒன்று கராச்சி விமான நிலையம் சென்றடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் அந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.