ரஷியாவுடனான இந்திய உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் - அமெரிக்கா நம்பிக்கை
|உக்ரைன் மோதலுக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் தான் உள்ளது, போர்க்களத்தில் அல்ல என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
வாஷிங்டன், டிசி,
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றார். ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கியதற்கு பிறகு மோடி ரஷியா சென்றிருப்பது இது முதல் முறையாகும். ரஷியாவுடன் இந்தியா நட்புறவு பேணுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. இதனிடையே மாஸ்கோவில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மேலும் உக்ரைன் மோதலுக்கான தீர்வு பேச்சுவார்த்தையில்தான் உள்ளது, போர்க்களத்தில் அல்ல என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. .
இந்நிலையில் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு, உக்ரைனில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வலியுறுத்தும் திறனைத் தருகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம். ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. போரை தொடங்கிய புதினால், அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மார்கரெட் மேக்லியோட் கூறுகையில், "இந்தியாவும் ரஷியாவும் மிகவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. போருக்கு எதிராக ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். உக்ரைனில் ரஷியாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும்" என்று தெரிவித்தார்.