இந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா... ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை
|இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில், ஓராண்டுக்குள் 2-வது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆசிய அமெரிக்கர்களின் பாரம்பரிய மாதத்திற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதனுடன், ஹவாய் மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது.
இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்திய அமெரிக்கர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இதில், இந்தியாவின் சாரே ஜகான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்ற பிரபல தேசப்பற்று பாடலை வெள்ளை மாளிகையின் இசை குழுவினர் இசைத்தனர். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, இந்த பாடலை முகமது இக்பால் எழுதினார்.
இந்திய அமெரிக்கர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, நிகழ்ச்சியில் இந்த பாடல் 2 முறை இசைக்கப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி இந்த பாடல் இசைக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில், ஓராண்டுக்குள் 2-வது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவை பூர்வீக நாடாக கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீசும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடந்த விருந்தின்போது, இந்தியாவின் தெருவோர பகுதிகளில் பரவலாக விற்கப்படும் கோல்கப்பா (பானி பூரி) மற்றும் சமோசா உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இவற்றை வெள்ளை மாளிகையிலேயே தயாரித்து இருந்தனர்.