இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது - ஐ.நா. தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ்
|ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா முன்னோடியாக செயல்படுவதாக டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது;-
"இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. ஜி-20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக இணைத்ததன் மூலம், தெற்கத்திய நாடுகள் இடையிலான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு குறித்த வலுவான செய்தியை உலகிற்கு இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.
சிறப்பான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நமது உலகளாவிய இயக்கத்தில் இந்தியா இணையற்ற பங்கு வகிக்கிறது. ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகளை ஏற்றுக்கொள்வதில் முன்னோடியாக செயல்படுதல் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. ஐ.நா.வின் மையத்தில் இந்தியாவின் தொலைதூர கிராமங்கள் வரை நீடித்திருக்கும் எங்கள் கூட்டாண்மை, தெற்கத்திய நாடுகளுக்கு உத்வேகத்தை அளிக்கிறது."
இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார்.